தமிழ்நாடு செய்திகள்

முட்டுக் கொடுத்தவர்கள் கூட, தலைகுனியும் அளவுக்கு விஜயின் வீடியோ அமைந்து விட்டது- ஆளூர் ஷாநவாஸ்

Published On 2025-09-30 19:52 IST   |   Update On 2025-09-30 19:52:00 IST
  • முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுக்கிறார் விஜய்.
  • விஜய், பக்காவான RSS BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது.

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் 5 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தொடர்பாக விஜயை விமர்சித்து விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "விஜய்யிடம் அரசியல் கூர்மை இல்லை என்று தான் நினைத்தோம். அவர் வெளிவர வெளிவரத் தான், துளி கூட அவரிடம் அரசியல் நேர்மை இல்லை என்பது அம்பலமாகிறது.

"திட்டமிட்ட நாளில் வராமல் திடீரென கரூர் வந்தது, குறித்த நேரத்தில் வராமல் மிகமிக தாமதித்தது, குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிக கூட்டத்தை வரவைத்தது, கூடிய மக்களுக்கு குடிக்க தண்ணீர் ஏற்பாடு கூட செய்யாதது, நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் குழந்தைகள் பெண்களை திரட்டியது, போலீஸ் எச்சரித்தும் கேட்காமல் கூட்டத்தில் புகுந்தது, ஜெனரேட்டர் பகுதியை சூறையாடியது, ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கியது, பிரச்சனை என்ற உடன் ஓடி ஒளிந்தது, மக்களை சந்திக்காமல் கட்சி கட்டமைப்பே கள்ள மெளனம் காத்தது" என்று ஓராயிரம் பிழைகள் செய்தும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமல்ல, முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுக்கிறார் விஜய்.

மூன்று நாட்களாக முக்கி முக்கி விஜய்க்கு முட்டுக் கொடுத்தவர்கள் கூட, வெட்கித் தலைகுனியும் அளவுக்கு விஜய்யின் ஒற்றை வீடியோ அமைந்துவிட்டது.

பொய் சொல்வதில், புரட்டு பேசுவதில், வன்மத்தை உமிழ்வதில், போகிற போக்கில் அடித்து விடுவதில், எதற்கும் பொறுப்பேற்காமல் கல் மனதுடன் வெளிப்படுவதில், அண்ணாமலையையும் RN.ரவியையும் பின்பற்றுகிறார் விஜய் என்று அன்றே சொன்னேன். அதை நாளும் நிரூபிக்கிறார் விஜய்.

விஜய், பக்காவான RSS BJP மெட்டீரியல் என்பது தெளிவாகிறது. பிரச்சனை என்ற உடன் வழக்கமாக மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆவார்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். விஜய் அதில் மட்டும் மாறுபட்டு மன்னிப்பு கேட்காமல் எஸ்கேப் ஆகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News