முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் உயர்வு
- மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துடன் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் வைகை அணையை வந்து சேர்கிறது. மேலும் மூல வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு ஆகியவற்றிலும் நீர் வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 2 அடி வரை உயர்ந்துள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 56.10 அடியாக உள்ளது. அணைக்கு 1582 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனவே விரைவில் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 2898 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.55 அடியாக உள்ளது. 1605 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு 200 கன அடி, குடிநீருக்காக 100 கன அடி நீருடன் சேர்த்து 1644 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 4826 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.20 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 92.16 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 45.40 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. பெரியாறில் 1.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.