உத்தனப்பள்ளி அருகே முதிய தம்பதியை தாக்கி நகை-பணம் கொள்ளை
- ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (56). இவர்கள் உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டரையில் 11 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
மேலும் அங்குள்ள தோட்டத்திலேயே அவர்கள் குடியிருந்து வந்தனர். அவர்களுடன் மருமகன் ராமச்சந்திரன் (40), பேத்தி வர்ஷினி (9) ஆகியோர் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் இருந்தனர்.
அந்த நேரம் காரில் 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ராஜா, கோவிந்தம்மாள் உள்ளிட்டோரை கத்தியை காட்டி மிரட்டினார்கள்.
மேலும் கோவிந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அந்த நேரம் ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார். இதனால் அவனுடன் இருந்த மற்ற கொள்ளையர்கள் ராமச்சந்திரனை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள்.
இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விவசாயி ராஜா குடும்பத்துடன் தோட்டத்தில் வீட்டில் இருப்பதை முகமூடி கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளையை நடத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த முகமூடி கொள்ளை கும்பலை பிடிக்க தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.