அகிலேஷே் கட்சிக்கு வாக்களிக்கமாட்டேன் என்று கூறிய இளம்பெண் கற்பழித்து கொலை: பெற்றோர் பரபரப்பு புகார்
- கொலை செய்யப்படுவதற்கு முன்பு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
- பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கர்ஹாலில் உள்ள கஞ்சாரா நதி பாலம் அருகே தலித் இளம்பெண்ணின் உடல் சாக்கு பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் குடும்பத்தினர் பிரசாந்த் யாதவ் என்ற நபர் கொலை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் கொலையின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கர்ஹால் இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களிக்கப்போவதாக அந்தப் பெண் கூறி உள்ளார். இது பிரசாந்தை கோபப்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரசாந்த் அந்த பெண்ணை மிரட்டியதாக குடும்பத்தினர் கூறினர்.
அந்த பெண்ணிற்கு நவம்பர் 19-ந்தேதி மிரட்டல் விடுக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
2 சந்தேக நபர்கள் நவம்பர் 19-ந்தேதி அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்த நாள் புதன்கிழமை அந்த பெண்ணின் உடல் ஒரு சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி வினோத் குமார் கூறுகையில்,
கர்ஹாலில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன 23 வயதான பெண், நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை 2 பேர் மீது புகார் அளித்துள்ளார். ஒருவர் பிரசாந்த் யாதவ் மற்றும் மற்றொருவர் மோகன் கத்தேரியா. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.