எவ்வளவு மழை பெய்தாலும் தயார் நிலையில் அரசு உள்ளது- உதயநிதி
- சமூக வலைதளங்களில் உள்ள புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- வடசென்னையில் 5 முதல் 8 செ.மீட்டர் மழை பதிவாகும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.
ராயபுரம்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வடசென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய், கேப்டன் கால்வாய் மற்றும் மணலி சாலையில் உள்ள இணைப்பு கால்வாய்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று காலை கொட்டும் மழையில் வியாசர்பாடி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணி, 36-வது வார்டிற்கு உட்பட்ட அழகேசன் தெரு டான் பாஸ்கோ பள்ளி அருகில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணி, 37-வது வார்டிற்கு உட்பட்ட கொடுங்கையூர் குப்பை சேகரிக்கும் மையத்தில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் 41 -வது வார்டிற்கு உட்பட்ட மணலி சாலையில் உள்ள இணைப்பு கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
எவ்வளவு மழை வந்தாலும் தயார் நிலையில் தமிழக அரசு உள்ளது. சமூக வலைதளங்களில் உள்ள புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வடசென்னையில் 5 முதல் 8 செ.மீட்டர் மழை பதிவாகும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் வட சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஆய்வு செய்கிறோம். வடசென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள்,331 கி.மீட்டர் தூர்வாரப்பட்டு 3 ½ லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ராஜன், மாநகர ஆணையாளர் பரமகுரு, வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.