'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி: 100 தொகுதிகளை நிறைவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கடந்த ஜூன் மாதம் முதல் அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
- இன்றுடன் உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 சட்டசபை தொகுதிகள் நிறைவு பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்.
"உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், வட்டச் செயலாளர்களை அழைத்துக் கட்சி நிலவரங்களை கேட்டறிகிறார்.
கடந்த ஜூன் மாதம் முதல் அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை பாராட்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்கள் செய்துள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.
தேர்தல் வருவதால் ஒற்றுமையாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும் கோஷ்டி பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.
அந்த வகையில் இன்று கடலூர், புவனகிரி, மயிலம் தொகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் சராசரியாக 1.30 மணி நேரம் வரை விசாரித்து கட்சி நிலவரங்களை தெரிந்து கொண்டார்.
அந்தவகையில் இன்றுடன் உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 சட்டசபை தொகுதிகள் நிறைவு பெற்றுள்ளது. நிர்வாகிகள் முன் வைக்கும் கோரிக்கைகள், அரசு சார்ந்த கோரிக்கைகள், கட்சி சார்ந்த கோரிக்கைகள் என பிரிக்கப்பட்டு இதில் தீர்வு காணப்படுகிறது.