தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. சிறப்பு பொதுக்குழு இன்று கூடுகிறது- முக்கிய முடிவுகளை விஜய் அறிவிக்க வாய்ப்பு

Published On 2025-11-05 08:13 IST   |   Update On 2025-11-05 08:13:00 IST
  • த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
  • பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

சென்னை:

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அவர் மீது அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தன. தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த விஜய், கரூர் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் த.வெ.க. அன்றாட அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தியது. கட்சியின் அன்றாடப்பணிகளை மேற்கொள்ள பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 28 பேர் கொண்ட நிர்வாகக்குழுவை விஜய் நியமித்தார்.

த.வெ.க. சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தொண்டரணி, மகளிரணி, இளைஞரணி, மாணவரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இதுதவிர விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட்ட மேலாண்மையை கடைப்பிடித்து விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுப்பதற்காக 2,500 இளைஞர்களை கொண்ட மக்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. ரவிக்குமார் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் பயிற்சி அளித்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் த.வெ.க.வின் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. இதில் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் பொதுவெளியில் நிகழ்ச்சிகளில் எதுவும் பங்கேற்காமல் இருந்தார்.

எனவே அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார். அவருடைய அனல் தெறிக்கும் பேச்சு நிறைவடைந்ததும், அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட இருக்கிறது. விஜய்யின் பேச்சை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வதற்காக, அக்கட்சியினர் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அழைப்பு கடிதம் மற்றும் தலைமைக்கழக அடையாள அட்டை வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பொதுக்குழுவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

காலை 9.15 மணிக்குள் பொதுக்குழு அரங்கிற்குள் வந்துவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கட்சி தலைமை பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News