நிலக்கோட்டையில் தி.மு.க.வை விமர்சித்து போஸ்டர் ஒட்டிய த.வெ.க. நிர்வாகி கைது
- தி.மு.க.வை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
- போஸ்டர் ஒட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று அதனை கிழித்தனர்.
நிலக்கோட்டை:
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கட்சி நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும், பேனர்கள் வைத்தும் கொண்டாடி வருகின்றனர். மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் த.வெ.க. சார்பில் சர்ச்சையான வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் தி.மு.க.வை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றதுடன் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், நிர்வாகிகள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து தி.மு.க. நகர செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியதாக த.வெ.க. கிழக்கு மாவட்ட நிர்வாகி நல்லு மகன் ஜெயச்சந்திரன் (வயது 45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இதனிடையே போஸ்டர் ஒட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று அதனை கிழித்தனர்.