முதல் பிரசார சுற்றுப்பயணம்- த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருப்புமுனையை ஏற்படுத்துமா திருச்சி?
- தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி.
- அறிஞர் அண்ணா முதன்முதலில் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என முடிவெடுத்த இடமும் திருச்சி தான்.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் இப்போதே தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் மக்களை கவர வியூகம் வகுத்து களமாடி வருகிறார்கள்.
இத்தகைய சூழலில் நடிகர் விஜயின் அரசியல் வருகை அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மாநாடுகளை நடத்தி தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களிடம் கூறி வந்த நடிகர் விஜய், அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தையும் தொடங்கிவிட்டார்.
அவரது சுற்றுப்பயணத்தின் முதல் தேர்வு திருச்சி. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி. 'சென்டிமென்ட்' விஷயங்களில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வின் 2-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். பின்னர் தனது ஆட்சியின் முக்கிய திட்டமான சத்துணவு திட்டத்தையும் திருச்சியிலேயே தொடங்கி வைத்தார். திருச்சியை 2-வது தலைநகராக மாற்றப்போவதாகவும் அறிவித்தார்.
இவ்வளவு ஏன்? அறிஞர் அண்ணா முதன்முதலில் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என முடிவெடுத்த இடமும் திருச்சி தான். திருச்சியில் நடத்துகிற மாநாடு உள்பட எந்த நிகழ்வாக இருந்தாலும் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அரசியல் கட்சிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார் நடிகர் விஜய்.
இந்த பிரசாரம் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று விஜய்யின் ரசிகர்கள், த.வெ.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். விஜய் பிரசாரம் செய்யப்போகும் மரக்கடை பகுதி பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்திய இடம். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தான் பிரசாரம் செய்தார். அந்தவகையில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு திருச்சி திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.