திருச்சியில் பிரசார பயணத்தை இன்று தொடங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்
- சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். தொடர்ந்து டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளது.
மக்கள் சந்திப்புக்காக விமானம் மூலம் விஜய் திருச்சி செல்கிறார். அவரது பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது.
இன்று காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
அரியலூரில் விஜய் பிரசாரத்திற்கு 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.