தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. முதலாமாண்டு விழா: ஏழைகளுக்கு உதவ விஜய் உத்தரவு

Published On 2025-01-28 11:02 IST   |   Update On 2025-01-28 11:02:00 IST
  • முதல் ஆண்டு நிறைவு விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.
  • கட்சிக்கு ஏற்கனவே 19 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வருகிற பிப்ரவரி 2-ந்தேதியுடன் 1 வருடம் நிறைவு பெறுகிறது.

முதல் ஆண்டு நிறைவு விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 கொள்கை தலைவர்கள் சிலைகளை கட்சி தலைவர் விஜய் திறந்து வைப்பதுடன் கட்சி கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதுமட்டுமின்றி கட்சி முதலாமாண்டு விழாவை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானங்கள் வழங்கி கோலாகலமாக கொண்டாட கட்சி தலைவர் விஜய் வலியுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை வழங்கி இருக்கிறார்.

கட்சிக்கு ஏற்கனவே 19 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் மீதமுள்ள மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இப்போதே விழாவுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி கிளை வாரியாக விழாவை சிறப்பாக நடத்தி அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்று சேரும் வகையில் அதற்கான பணிகளில் நிர்வாகிகள் செயல்படும்படி கட்சி தலைமையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம் ஆகிய 4 தொகுதிகளிலும் மாவட்ட நிர்வாகி தி.நகர் அப்புனு தலைமையில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம், கட்சி பெயர் பலகைகள் புதிதாக திறப்பு, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையற்ற நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் உள்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கின்றது.

சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர், மதுரவாயல், கொளத்தூர், ஆவடி ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

5 பள்ளி கூடங்களுக்கு கம்ப்யூட்டர் சாதனங்கள் மற்றும் பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் ஏழைகளுக்கு விலையில்லா வேஷ்டி, சேலைகள் வழங்கி கொடி ஏற்றுதல் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கோலாகலமாக முதலாமாண்டு விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News