அமைச்சருக்கு பண மாலை போட்டு வரவேற்பு அளித்த த.வெ.க. நிர்வாகி - விஜய்க்கு மன்னிப்புக் கடிதம்
- அமைச்சர் எ.வ.வேலுவை, பாரதிதாசன் 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றார்.
- திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு புதுமனை புகுவிழா கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர் பாரதிதாசன் கடந்த 8-ந்தேதி புதுமனை புகுவிழா நடத்தினார்.
விழாவிற்கு அழைப்பு விடுத்து இருந்த நிலையில் அமைச்சர் எ.வே.வேலு கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் எ.வ.வேலுவை, பாரதிதாசன் 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
தி.மு.க.வையும் தமிழக அரசையும் மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் நடிகர் விஜய் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருவர், தி.மு.க. அமைச்சரை வீட்டுக்கு வரவழைத்து, நோட்டு மாலை அணிவிப்பதா எனக்கேட்டு, கட்சியில் இருக்கும் சிலர் த.வெ.க. தலைவர் விஜய்க்கு கடிதம் அனுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமை பாரதிதாசனிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை தெற்கு செயலாளர் பாரதிதாசன் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு புதுமனை புகுவிழா கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நண்பர்கள், கட்சியினர் உள்ளிட்டோரை அழைத்தது போல், என்னுடைய குடும்ப நண்பரான அமைச்சர் வேலுவையும் அழைத்தேன். அவரும் வருகை தந்தார்.
அமைச்சர் என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் 20 ரூபாய் நோட்டு மாலையும், மலர் மாலையும் அணிவித்தேன். அச்செயலுக்காக வருந்துகிறேன். அதற்காக தலைவரிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இனி வரும் காலங்களில் என் சம்பந்தப்பட்ட விழாக்களில் நம் கழக சொந்தங்கள் தவிர வேறு எந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் அழைக்க மோட்டேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.