தமிழ்நாடு செய்திகள்

நெல் கொள்முதல் முறைகேடு புகாருக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

Published On 2025-05-24 14:08 IST   |   Update On 2025-05-24 14:08:00 IST
  • தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திமுக அரசே ரத்து செய்திருப்பதும் விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
  • நெல்கொள்முதல் செய்ததில் எழுந்திருக்கும் முறைகேடு புகார் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உணவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

சென்னை:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை அரசே கொள்முதல் செய்துவந்த நிலையில், நடப்பாண்டு திடீரென தனியார் நிறுவனத்திற்கு அனுமதியை வழங்கி அதற்காக 170 கோடி ரூபாய் வரை முன்பணமாக திமுக அரசு கொடுத்திருப்பதாகவும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்கப்படாமல் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை திமுக அரசே ரத்து செய்திருப்பதும் விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. எனவே, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்குவதோடு, நெல்கொள்முதல் செய்ததில் எழுந்திருக்கும் முறைகேடு புகார் தொடர்பாக முறையான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உணவுத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News