சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுற்றி உள்ள இடம் கையகப்படுத்தப்படாது- டி.ஆர்.பாலு
- சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்றால் அது பரந்தூர் விமான நிலையம் தான்.
- தேவைப்படும் மீதமுள்ள இடத்தை கூடிய விரைவில் கையகப்படுத்தி புதிய விமான நிலையம் கட்டப்படும்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையம் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று விமான நிலைய இயக்குனர் ராஜ கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் விமான நிலைய ஆலோசனைக் குழு கூட்ட சேர்மன் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் உட்பட விமான நிலைய அதிகாரிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை விமான நிலையத்திற்குள் தற்பொழுது பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் விமான பயணம் செய்யும் பயணிகள் மிக எளிதாக விமான நிலையத்தில் இருந்து தங்களுடைய இருப்பிடங்களுக்கு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் இயக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது உறுதி.
விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலைய முனையம் வருவதற்கு ஏறக்குறைய 40 நிமிடங்கள் ஆகிறது என்று பல பயணிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவாதித்தோம். அந்த நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தற்போது மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையம் உள்ள பகுதியைச் சுற்றி உள்ள கவுல் பஜார், பொழிச்சலூர், அனகாபுத்தூர் போன்ற இடங்களை கையகப்படுத்தும் பணி இல்லை. சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்றால் அது பரந்தூர் விமான நிலையம் தான்.
சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுகிறது.
அதற்காக சுமார் 5700 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 2000 ஏக்கர் அரசு நிலம். 3700 ஏக்கர் தனியார் நிலம். தனியார் இடமிருந்து சுமார் 1300 ஏக்கர் தற்பொழுது வாங்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மீதமுள்ள இடத்தை கூடிய விரைவில் கையகப்படுத்தி புதிய விமான நிலையம் கட்டப்படும்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுகிறது குறித்து கேட்டறிந்தோம். இனிவரும் காலங்களில் தமிழில் முறையாக அறிவிப்பு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.