தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
- வனத்துறையினர் யானை இருப்பிடத்தை அறிய அதிநவீன டிரோன் கேமராக்களை பயன்படுத்தி யானையை தேடுகின்றனர்.
- கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு அங்கு வியாபாரம் நடைபெற்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது தொட்டபெட்டா மலை சிகரம்.
அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.
இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வழிதவறி தொட்டபெட்டா மலை சிகரத்திற்குள் நுழைந்தது.
இதையடுத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். இந்த பணியில் 60-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வனத்துறையினர் யானை இருப்பிடத்தை அறிய அதிநவீன டிரோன் கேமராக்களை பயன்படுத்தி யானையை தேடுகின்றனர். நேற்று 4-வது நாளாக பணி தொடர்ந்தது.
யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் கடந்த 3 தினங்களாக அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தொட்டபெட்டா மலை சிகரம் திறந்ததை அறிந்ததும், ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வந்து சுற்றி பார்த்தனர். கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு அங்கு வியாபாரம் நடைபெற்றது.