தமிழக சட்டசபை 2-வது நாள் அமர்வு: மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்
- ஆளுநர் உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- அவையில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
சட்டசபையில் நேற்று தேசியகீதத்தை முதலில் பாடவில்லை என குற்றச்சாட்டு கூறி கவர்னர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார். அவர் உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கவர்னர் உரையை சபாநாயர் அப்பாவு வாசித்தார்.
இந்நிலையில் தமிழக சட்டசபையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கியது. அவையில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்டசபை உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மறைந்த தலைவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டசபை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபையில் நாளை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும்.