தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தொடங்கியது

Published On 2025-12-11 12:03 IST   |   Update On 2025-12-11 12:03:00 IST
  • அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
  • பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்கியது. ஜனவரி 24-ந்தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களில் முதல் நிலை சரி பார்ப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரதிநிதிகள் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது.

இதன்படி பிரதிநிதிகள் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் நாட்களில் காலை 8.45 மணி முதல் மாலை 7 மணிவரை எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருக்க வேண்டும்.

முதல் நிலை சரிபார்ப்பு பணியின் நிறைவாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது மாதிரி வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

முதல் நிலை சரிபார்ப்பு பணியில் பழுதானது என கண்டறியப்படும் எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News