தமிழ்நாடு செய்திகள்

ரூ.40 ஆயிரம் கோடி ஏற்றுமதி இலக்கை எட்டியது - திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் உற்சாகம்

Published On 2025-06-13 13:52 IST   |   Update On 2025-06-13 13:52:00 IST
  • இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது.

நல்லூர்:

இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் தொழில் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறியதாவது:-

கடந்த 2024-25ம் நிதியாண்டு கணக்கின் அடிப்படையில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40000 கோடி இலக்கினை எட்டியுள்ளது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகிறது. கடந்த ஆண்டில் இது 54 சதவீதமாக இருந்தது.

ஏற்றுமதிக்கான பல்வேறு சலுகைகள் குறைக்கப்பட்ட சூழ்நிலை, பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, அபரிதமான வரி மற்றும் மின்கட்டண உயர்வு , ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக வளர்ந்த பொருளாதார நாடுகளின் மந்த நிலை , செங்கடல் பிரச்சனை, தாறுமாறாக உயர்ந்த கப்பல் போக்குவரத்து கட்டணம், கன்டெய்னர் பற்றாக்குறை போன்ற பல்வேறு சவால்களை சந்தித்த சூழ்நிலையிலும் இந்த வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம் என்றால் அது உண்மையிலேயே வரலாற்று சாதனைதான்.

சமீபத்தில் கையெழுத்தான இங்கிலாந்துடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகவுள்ளது. அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தம், இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடம் கையெழுத்தாகவுள்ளது.

ஐரோப்பாவுடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போன்ற சாதகமான வாய்ப்புகளால் வரும் காலங்களில் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சி மிக பிரமாண்டமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போர்க்கால அடிப்படையில் தொழில்துறை தொடர்ந்து வைக்கும் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும், அவ்வாறு உதவும்பட்சத்தில் இன்றைய வளர்ச்சி அடுத்த 5 வருடங்களில் இரட்டிப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News