விடுதலை சிறுத்தைகள் கட்சி 24-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
- பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான்.
- மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24-ந் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எஸ்.ஐ.ஆர். என்பது பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்துகிற ஒரு கூட்டுச் சதி. அவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.
எனவே, இது உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய முறைப்படி எஸ்.ஆர்.என்கிற திருத்த முறையையே இந்த தேர்தலுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான். பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
மேலோட்டமாக வாக்காளர் பட்டியல் சீராய்வு என்று சொல்லப்பட்டாலும் குடியுரிமையை பறிக்கிற தேசிய குடிமக்கள் பேரேட்டை உருவாக்குகிற சட்டத்தை நடை முறைப்படுத்துகிற சதி முயற்சிதான் இது. வெளிப்படையாக அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை என்பதை உணர வேண்டும். இது நாட்டுக்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.