தமிழ்நாடு செய்திகள்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலு இழக்கிறது

Published On 2025-04-10 12:39 IST   |   Update On 2025-04-10 12:39:00 IST
  • மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
  • தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.

சென்னை:

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) இன்று வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.

தென் தமிழகத்தை யொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும் இன்று ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று வெப்பம் 97 டிகிரி பாரன்ஹீட்டை யொட்டி இருக்கும்.

தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 80 மி.மீ. மழை பதிவானது.

தமிழகத்தில் நேற்று (புதன்கிழமை) அதிக பட்சமாக வேலூரில் 101.3, சேலத்தில் 100.76 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News