null
மலையாளத்தில் பேசிய முதல்வர்.. தமிழில் பேசிய மோடி - நயினாருக்கு அப்பாவு பதில் - அவையில் சிரிப்பலை
- மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதி மறுக்கப்பட்டது.
- கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு எனக்கூறி ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கான ரூ.2000 கோடி கல்வி நிதியை தர மறுத்து மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் ருசிகர விவாதம் நடந்துள்ளது.
மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் புதிதாக பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பேற்றுள்ள நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவையில் பேசும்போது, முதலமைச்சர் கேரளாவுக்கு செல்லும்போது மலையாளத்தில் பேசினார் என தெரிவித்தார்.
அப்போது பேசத்தொடங்கிய சபாநாயகர் அப்பாவு, பிரதமர் கூட தமிழில் பேசுகிறார். அவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது வணக்கம் என சொல்லவில்லையா, அதுபோல தான் இதுவும் என பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அவையில் சிரிப்பலை பரவியது.
இதற்கிடையே எழுந்த முதல்வர் ஸ்டாலின், மலையாளத்தில் தாம் பேசியதை தமிழில் எழுதி வைத்துதான் படித்தேன் என விளக்கம் அளித்தார்.