தமிழ்நாடு செய்திகள்

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்: ஆசிரியையை கொலை செய்த காதலன்- தஞ்சையில் பரபரப்பு

Published On 2025-11-27 12:58 IST   |   Update On 2025-11-27 12:58:00 IST
  • காவ்யா, அஜித் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
  • காவியாவுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.

தஞ்சாவூா்:

தஞ்சாவூரை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல களக்குடி கொத்தட்டை பரந்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி.

இவரது மகள் காவியா ( வயது 26). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் (26) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் அவருக்கு அவரது அத்தை மகனுடன் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் இந்த விவரத்தை அஜித்குமாரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்து வந்தார். நேற்று இரவு அஜித் குமாருடன் காவியா வீடியோ காலில் பேசினார்.

அப்போது நிச்சயதார்த்தம் செய்த போது எடுக்கப்பட்ட போட்டோக்களை அஜித் குமாரிடம் காண்பித்தார். இதனைப் பார்த்து அஜித்குமார் கடும் ஆத்திரம் அடைந்து என்னிடம் எதுவும் கூறாமல் எப்படி நீ வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம்.

என்னுடன் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். வேறு ஒருவரை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று கூறி போன் இணைப்பை துண்டித்தார்.

இந்த நிலையில் இன்று காலை காவியா பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அங்கு வந்த அஜித்குமார் என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம் எனக் கூறி ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக காவியாவை குத்தினார். இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்து காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த அந்த வழியாக சென்ற ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அம்மாபேட்டை போலீசார் விரைந்து வந்தனர். காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தனர்.

தஞ்சை அருகே பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News