தமிழ்நாடு செய்திகள்

விருகம்பாக்கம் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் வகுப்பறையில் பாலியல் அத்துமீறல்

Published On 2025-04-30 12:03 IST   |   Update On 2025-04-30 12:03:00 IST
  • இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர்.
  • சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

சென்னை:

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மதுரவாயலை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மோகன் மாணவியை தவறான கண்ணோட்டத்திலேயே பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி வகுப்பறையில் தனியாக இருந்த போது ஆசிரியர் மோகன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். இது பற்றி மாணவி பயந்து போய் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார்.

ஆனால் அறிவியல் ஆசிரியர் மோகன் மாணவியிடம் காம லீலையில் ஈடுபட்டது பற்றி பள்ளியில் பணியாற்றி வரும் வேறு ஒரு ஆசிரியருக்கு தெரிய வந்தது. அவர் இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் பள்ளிக்கல்வித்துறையில் புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கும் தங்கள் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார் விருகம் பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆசிரியர் மோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது ஆசிரியர் மோகன் திடீரென மறைத்து வைத்திருந்த 25 தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கினார். இதில் மயக்கம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு ஆசிரியர் மோகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் ஆசிரியர் மோகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வி துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் படித்து வந்த சக மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News