புதுக்கோட்டை பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ஜார்ஜ் கோட்டையை பிடிக்க வியூகம் வகுப்போம்- தமிழிசை சவுந்தரராஜன்
- ஆட்சி நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும்.
- அப்பட்டமான ஒரு பொய் நாடகம் தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கே: புதுக்கோட்டை விழா கோலமாக இருக்கிறது. அதுகுறித்து?
ப: ஜார்ஜ் கோட்டையை பிடிக்கப் போகிறோம், அதனால் புதுக்கோட்டை விழா கோலமாக இருக்கிறது. பல கோட்டைகளைப் பிடித்து சாதனை படைத்த அமித்ஷா இன்று வருகிறார். புதுக்கோட்டையில் ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கான வியூகத்தை வகுக்க போகிறோம். நிச்சயமாக வெற்றி கிடைக்கும். தொடர்ந்து தமிழக அரசு மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறது.
தேர்தல் ஸ்டண்ட் என்பது நேற்று இவர்கள் அறிவித்திருக்கிற ஓய்வூதிய திட்டம். இது புதிய ஓய்வுதிய திட்டமா, பழைய ஓய்வூதிய திட்டமா, அல்லது பழைய, புதிய ஓய்வூதிய திட்டமா என்ற ஒரு குழப்பத்திலேயே அந்தத் திட்டம் இருக்கிறது. இப்படி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் ஓய்வூதியத் திட்டம் வந்திருக்கிறதா என்பதில் மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
மகாத்மா காந்தி பெயரை மாற்றி விட்டு பாரத பிரதமர் அதை விரிவுபடுத்தினார். இவர்கள் பெயரை மாற்றி அதை சுருக்கி விட்டு, ஏற்கனவே அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று பின்னர் அவர்களுக்கே கொடுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அதற்கு எல்லோரும் ஸ்வீட் கொடுக்கிற மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஒரு மறு உருவு தானே தவிர, பழைய ஓய்வூதிய திட்டம் இல்லை.
கே: தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து நிதிகள் விடுவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே?
ப: ப.சிதம்பரம் போன்றவர்கள் கடன் வாங்குவது பிரச்சனை இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசை பொறுத்தவரை முதலமைச்சர் சொல்கிறார் போதையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று. ஆட்சி நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக தான் செயல்பட வேண்டும். இணக்கமில்லாமல் நீங்கள் இருந்து கொண்டிருப்பதால் தான் எல்லாம் நாங்கள் செய்தோம், நாங்கள் செய்கிறோம் என்று சொல்வது. துப்புரவு தொழிலாளர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை அடி அடி என்று அடிக்கிறீர்கள்.
தேர்தல் சமயத்தில் இன்னும் பல அறிவிப்புகள் வரலாம். இந்த ஓய்வூதிய திட்டம் எப்போது முதல் அமல்படுத்தப்படும் என்று இந்த அரசாணையில் இல்லை. தி.மு.க.வுக்கு நாம் அடுத்து வருவோமா என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் அறிவிப்பு விடுவோம் என்று தான் நடக்கிறது. இது போன்ற பல அறிவிப்புகளை நான் எதிர்பார்க்கிறேன்.
கே: தி.மு.க. கூட்டணி கட்சியினர் மது ஒழிப்பு போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் கட்சியில் உள்ளவர்களே மது ஆலையை நடத்துகிறார்கள்.
ப: வைகோவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், நீங்கள் எதற்கு எதிராக நடைபயணம் செல்கிறீர்கள்? அறிவாலயத்திற்கு தான் நீங்கள் நடைபயணம் செல்ல வேண்டும். சாராய ஆலையை நோக்கி தான் நடைபயணம் செல்ல வேண்டும். ஆனால் சாராய ஆலையை நீங்கள் மூட மாட்டீர்கள், டாஸ்மாக்கை குறைக்க மாட்டீர்கள். அப்பட்டமான ஒரு பொய் நாடகம் தமிழக அரசால் நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் நாளை 10 லட்சம் லேப்டாப்புகளை முதலமைச்சர் மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் ஏன் எச்.சி.எல். நிறுவனத்தில் வாங்கவில்லை. நமது தமிழரான சிவ நாடாரிடம் ஏன் வாங்கவில்லை?
கே: நீங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுது அறநிலையத்துறை அமைச்சருக்கும் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதே போல் இப்பொழுது கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ளதே?
ப: நான் கவர்னராக இருக்கும்போது கூட அதைப்பற்றி சிந்தித்தது கிடையாது. நான் கூட்டத்தோடு தான் செல்வேன் என்று நான் கூறியபோது என்னுடன் வந்தவரை தடுத்து நீங்கள் மட்டும் செல்லுங்கள் என்று கூறுகிறார். இவர் தனியாகவா எல்லா இடங்களுக்கும் செல்கிறார்? கோவில் அவருடைய சொந்த சொத்தா, பொதுமக்களுடையது தான். இந்த தி.மு.க. கூட்டணி தான் மதசார்பற்ற கூட்டணி என்று பெயர் வைப்பதற்கு உங்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று நான் சொல்கிறேன்.
கே: தி.மு.க. தேர்தல் அறிக்கை பற்றி டோல் பிரீ எண்ணை வழங்கி, மக்களுடைய தகவல்களை தெரிவிக்க சொல்லி இருக்கிறார்களே?
ப: ஏற்கனவே உள்ள தேர்தல் அறிக்கையை பார்க்க சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.