நெல்லை மேலப்பாளையத்தில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் கைது
- தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
- போலீசார் நெல்லையில் முகாமிட்டு இன்று 3-வது நாளாக விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் தியேட்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரவு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.
இந்த தியேட்டரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தியபோது, அதில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். மேலும் தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர்.
மதுரையில் இருந்து அந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் நெல்லையில் முகாமிட்டு இன்று 3-வது நாளாக விசாரித்து வருகின்றனர்.
சுமார் 60-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி சந்தேகப்படும்படியாக இருந்த 3 நபர்களை மேலப்பாளையம் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவருக்கு இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது என போலீசார் உறுதிபடுத்தி உள்ள நிலையில், அந்த நபரை கைது செய்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.
அந்த நபர் அளிக்கும் தகவலின் அடிப்படையில், வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 2 பேர் யார்-யார்? என்பது தெரியவரும் எனவும், இன்றைக்குள் அவர்கள் போலீசில் பிடிபடுவார்கள் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் ஒருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.