தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் நாளை 2 இடங்களில் போர் ஒத்திகை..!

Published On 2025-05-06 21:41 IST   |   Update On 2025-05-06 21:41:00 IST
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
  • இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, வர்த்தக தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அதேபோல் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதற்கிடையே பிரதமர் மோடி முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏவுகணை சோதனையை நடத்தியதால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த சூழலில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. அதில் பாதுகாப்பு ஒத்திகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், அணுமின் நிலையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்பு உளவியல் ரீதியாக எதிா்வரும் சூழ்நிலைகளுக்கு பொதுமக்களை தயார்படுத்தும் விதமாகவே இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த மத்திய அரசு தீா்மானித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதலை தொடங்கும் என்ற சூழலில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடியை இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார்.

நேற்று மோடியை அஜித் தோவல் சந்தித்திருந்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பாதுகாப்பு ஒத்திகை, பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கை, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் மோடி- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 2 முறை சந்தித்து பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுடன் இன்று மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை நடைபெறும். நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த ஒத்திகை நடைபெறும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News