11 நகரங்களுக்கு வழங்கிய பிரதமரின் 900 மின்சார பஸ்களை தமிழகம் ஏற்க மறுப்பு?
- டிக்கெட் வருமானம், பஸ் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளலாம்.
- மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
சென்னை:
மத்திய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் 'பி.எம் மின்சார டிரைவ்' மற்றும் பி.எம். மின்சார பஸ் சேவை என்ற 2 திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் பி.எம். மின்சார பஸ் சேவை திட்டம் 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதற்காக மத்திய அரசு ரூ.57 ஆயிரத்து 613 கோடி ஒதுக்கியது. 2 பிரிவுகளாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் ஒரு பிரிவாக 10 ஆயிரம் மின்சார பஸ்கள் 169 நகரங்களில் இயக்கப்படும்.
40 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான மக்கள் தொகை நகரங்களுக்கு தலா 150 பஸ்களும், 5 லட்சம் முதல் 20 லட்சத்திற்கு தலா 100 பஸ்களும், 5 லட்சத்திற்கு கீழ் உள்ள நகரங்களுக்கு தலா 50 பஸ்களும் வழங்கப்படும்.
இந்த மின்சார பஸ்களை நிதி கொடுத்து வாங்கி பராமரித்து இயக்கும் பொறுப்பு தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. டெண்டர் மூலம் இந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2037-ம் ஆண்டு வரை அவர்கள் அந்த பஸ்களை இயக்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு கட்டணம் என்ற அடிப்படையில் அந்த பஸ்கள் இயக்கப்படும் தூரத்திற்கு மத்திய அரசு பணம் வழங்கி விடும். அதே நேரத்தில் டிக்கெட் வருமானம், பஸ் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சார்ஜிங் நிலையம் அமைப்பது போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மாநில அரசு தான் பொறுப்பு. இருந்தாலும், அதற்கான நிதி உதவியையும் மத்திய அரசு வழங்கும்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல மாநிலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு 7 ஆயிரத்து 293 பஸ்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் 6,518 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.437 கோடி விடுவித்துள்ளது.
மத்திய அரசு, இந்த பஸ் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11 நகரங்களை தேர்வு செய்துள்ளது. அந்த அடிப்படையில் கோவைக்கு 150 மின்சார பஸ்கள், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவற்றுக்கு தலா 100 பஸ்களும், அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகியவற்றுக்கு தலா 50 பஸ்களும் என மொத்தம் 900 மின்சார பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு, பிரதமரின் இந்த மின்சார பஸ்களை தங்களது மாநிலத்திற்கு வேண்டாம் என்று நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரி ஒருவர் கூறும் போது, பிரதமர் மின்சார பஸ்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 9 சதவீத பஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதற்காக 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால் தமிழக அரசுக்கு இந்த திட்டத்தின் கீழ் பஸ்கள் பெற விருப்பம் இல்லாததால் அவர்களிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என்றார்.
ஏன் வேண்டாம்? அமைச்சர் விளக்கம்
பி.எம் மின்சார டிரைவ் திட்டத்தில் 40 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதாராபாத், அகமதாபாத், கொல்கத்தா, சூரத், புனே ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் இந்த நகரங்களில் 14 ஆயிரம் மின்சார பஸ்கள் வாங்க மத்திய அரசு நிதி உதவி வழங்கும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் சென்னைக்கு மின்சார பஸ்கள் பெற வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு செய்து விட்டது.
இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்கள் அமைச்சர் சிவசங்கரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தினால் நிதி சரியாக வராது. பெயர்கள் மட்டும் அவர்களுடையதாக இருக்கும். எனவே தான் தமிழக அரசு சுயமாகவே மின்சார பஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்றார்.