தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது

Published On 2025-09-25 16:41 IST   |   Update On 2025-09-25 16:41:00 IST
  • சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
  • நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுளளது.

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.

கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறுகிறது.

இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News