தமிழ்நாடு செய்திகள்

திராவிட மொழிகளின் தாய் தமிழ்தான்: கமலுக்கு ஆதரவாக பேசிய சீமான்

Published On 2025-06-03 15:55 IST   |   Update On 2025-06-03 15:55:00 IST
  • கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்று கமல் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடகூடாது என கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி வேகமாக நடைப்பெற்று வருகிறது.

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றி கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்ற சொல்லிற்காக கன்னட அரசியல் அமைப்பினர் கமல ஹாசனை புறக்கணித்து தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடகூடாது என போராடி வருகின்றனர். அதேப் போல் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் 'தக் லைப்' படத்திற்கு தடையை விலக்கக்கோரிய மனு தொடுக்கப்பட்டது. அதன் மீதான விசாரணையில் அம்மாநில உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததற்கு என்ன ஆதாரம்? கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூற நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா? கன்னடம் குறித்த கமல்ஹாசன் பேச்சால் தற்பொழுது பதற்றம் உருவாகியுள்ளது ஒரு மன்னிப்பு கேட்டால் என்ன? என கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடகாவில் இருந்து சில கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்றால் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிபதி நாக பிரசன்னா கருத்து கூறியுள்ளார்.

இந்நிலையில், தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் இதற்காக தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று கமல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் கன்னட வெளியீட்டை தள்ளிவைப்பதாகவும் கமல் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் கர்நாடக ஃப்லிம் சேம்பர், கர்நாடக அரசு மற்றும் கமல்ஹாசன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய சீமான், "தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற உண்மையை ஏற்பதில் உங்களுக்கு என்ன ஈகோ?; தமிழில் இருந்து கன்னடம் வரவில்லை என்றால் அதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? வரலாற்றை படித்தவர் கமல். சித்தராமையாதான் வரலாற்றை படிக்க வேண்டும். KGF, காந்தாரா உள்ளிட்ட கன்னடப் படங்கள் தமிழகத்தில் இடையூறின்றி ஓடின.

திராவிட மொழிகளின் தாய் தமிழ் என அனைவருக்கும் தெரியும்; கன்னட மொழி குறித்து கமல் தவறாக கூறவில்லை. வாய்க்கு வந்ததை அவர் கூறவில்லை. கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை. பணமா, இனமா என்பதில் இனமே முக்கியம். 63 நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களில் யாரேனும் கன்னடர்கள் உள்ளனரா?" என்று கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News