தமிழ்நாடு செய்திகள்

தாளவாடி அரசு பஸ்சில் மழைநீரில் நனைந்தபடி பயணித்த பயணிகள்

Published On 2025-05-26 10:17 IST   |   Update On 2025-05-26 10:17:00 IST
  • பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியாத நிலையில் ஓரமாக ஒதுங்கினர்.
  • மலைப்பகுதியில் நல்ல தரத்துடன் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சில தினங்களாக தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

மலைக்கிராமங்களில் மக்கள் அன்றாட தேவைகளுக்கு அரசு பஸ்சை நம்பியுள்ளனர். இந்த அரசு பஸ் கிராமங்களில் இருந்து தாளவாடிக்கும், வெளியூருக்கும் சென்று வருகிறது. இந்நிலையில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிளை ஏற்றி கொண்டு அரசு பஸ் நேற்று மாலை 5.30 மணியளவில் சத்தியமங்கலம் புறப்பட்டது.

மாலை 6 மணியளவில் பஸ் ஆசனூர் அருகே சென்ற போது பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் பஸ்சின் மேற்கூரையில் ஆங்காங்கே உள்ள துவாரத்தின் வழியாக மழை நீர் அருவியாக கொட்டியது. இதனால் பஸ்சில் பயணித்த பயணிகள் இருக்கையில் அமர முடியாத நிலையில் ஓரமாக ஒதுங்கினர்.

ஆனால் ஆங்காங்கே மழை நீர் துவாரம் வழியாக கொட்டியதால் பயணிகள் நனைந்தபடி பயணித்தனர். பஸ்சில் மழைநீர் அனைத்து பகுதியில் கொட்டியதால் பெரும் சிரமத்துக்குள்ளாகிய பயணிகள் நிம்மதியிழந்து பயணித்தனர். இதை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து அதை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மலைப்பகுதியில் ஓட்டை ஓடசல் பஸ்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதாகுவதும், மழைநீர் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே மலைப்பகுதியில் நல்ல தரத்துடன் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News