தமிழ்நாடு செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நாளை மறுதினம் ஆய்வு

Published On 2025-09-09 11:50 IST   |   Update On 2025-09-09 11:50:00 IST
  • மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது.
  • இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது.

கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அணைக்கு வரும் நீர் அளவு, பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழுக்கள் வருகை தருவது வழக்கம் அதன்படி கடந்த மார்ச் 22-ந் தேதி மத்திய கண்காணிப்பு குழுவும் ஜூன் 3-ந் தேதி துணை கண்காணிப்பு குழுவும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் நாளை மறுதினம் (11-ந்தேதி) துணை கண்காணிப்பு குழு ஆய்வு நடத்த வருகை தருகின்றனர். இதன் தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின், பெரியாறு அணை கம்பம் சிறப்பு கோட்ட பிரிவின் நிர்வாக பொறியாளர் செல்வம் ஆகியோர் உள்ளனர்.

கேரள அரசின் பிரதிநிதிகளாக அம்மாநில நீர்பாசன துறையின் கண்காணிப்பு பொறியாளர் லெவின்ஸ் பாபு, செயற்பொறியாளர் சிஜூ உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்த உள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 136 அடி வரை உயர்ந்த நிலையில் ரூல் கர்வ் நடைமுறை பின்பற்றப்படுவதால் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் உபரி நீர் வீணாக கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்டது. எனவே ரூல் கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமிக்க முடியாததால் தற்போது அணையின் நீர்மட்டம் 134 அடிக்கும் கீழ் சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 133.85 அடியாக உள்ளது. வரத்து 478 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1020 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5597 மி.கன அடியாக உள்ளது.

துணை கண்காணிப்பு குழு ஆய்வு என்பது சம்பிரதாயத்துக்காக நடப்பதாகவும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில், முல்லைப்பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில் இதுவரை மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வுகளால் பேபி அணையை பலப்படுத்தி விட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை இன்று வரை நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. மேலும் ஆண்டு தோறும் தமிழக பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டிய எந்தவித பராமரிப்பு பணியையும் செய்வதற்கு கேரள அரசு சம்மதிக்காமல் இடையூறு செய்து வருகிறது.

எனவே இந்த குழுவின் ஆய்வுகள் என்பது வெறும் சம்பிரதாயம் என்றே தெரிகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் அளித்த பல்வேறு வழிகாட்டுதலையும், உத்தரவுகளையும் கேரள அரசு பின்பற்றுவது இல்லை. தமிழகத்தின் சார்பில் படகு விடுவதற்கும் அனுமதி அளிக்கவில்லை. எனவே எவ்வித அதிகாரமும் இல்லாத இந்த குழுக்களாலும், ஆய்வறிக்கையை வைத்துக் கொண்டு எந்தவித முனைப்பும் காட்டாத மத்திய நீர்வளத்துறையின் செயல்பாடுகளும், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.

இதன் காரணமாகவே கடந்த ஆண்டு குழுவில் இடம்பெற்றிருந்த தமிழக அதிகாரிகள் ஆய்வை புறக்கணித்து வெளியேறினர். எனவே முல்லைப்பெரியாறு அணையில் பறிக்கப்பட்ட தமிழகத்தின் உரிமையை இந்த குழுக்கள் தங்களின் ஆய்வுகள் மூலமும், அதன் அறிக்கைகள் மூலமும் பெற்றுத் தருமேயானால் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News