அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்- 15 மாணவர்களுக்கு நூதன தண்டனை
- 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
- நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வன்னிகோனேந்தலில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளான்.
அப்போது அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் சேர்ந்து 9-ம் வகுப்பு மாணவனிடம் மிட்டாயை பிடுங்கிக் கொண்டதோடு, அவனை அவதூறாக பேசியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இரு தரப்பினராக மாணவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.
அங்கிருந்த ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் மாணவர்கள் சமாதானமாகவில்லை. உடனடியாக தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து சுமார் 15 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் 15 பேரையும் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதி குழும நடுவர்கள் விசாரணை நடத்தி 15 சிறார்களுக்கும் அறிவுரை வழங்கியதோடு சில நிபந்தனையும் விதித்தனர். அந்த வகையில் காலாண்டு தேர்வு முடிந்தவுடன் அந்த வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்றும், ஒழுக்கமான முறையில் தலைமுடியை வெட்டி விட்டு வர வேண்டும் எனவும் உத்தரவிட்டு அவர்களை விடுவித்தனர்.