நீட் தேர்வில் தோல்வி - மாணவி தற்கொலை
- மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார்.
- கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார்.
பெரம்பூர்:
சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் குமார். இவர் தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சஞ்சி ஸ்ரீ டாக்டருக்கு படித்து வருகிறார். அக்காவை பார்த்து 2-வது மகள் மதன ஸ்ரீயும் டாக்டருக்கு படிக்க விரும்பினார்.
இதற்காக அவர் நீட் தேர்வு எழுதி இருந்தார். கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியானபோது குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். இதனால் கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்த மதன ஸ்ரீ சோகத்துடனேயே காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு 11 .30 மணி அளவில் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று மதன ஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் போலீ சார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வால் மாணவிகள் பலர் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்டு உள்ள நிலையில் சென்னை கொடுங்கையூரிலும் நேற்று மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.