தமிழ்நாடு செய்திகள்

மின்சார ரெயில்களில் எதிர் இருக்கையில் கால் வைத்தால் தண்டனை- தெற்கு ரெயில்வே எச்சரிக்கை

Published On 2025-09-12 13:48 IST   |   Update On 2025-09-12 13:48:00 IST
  • புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
  • ரெயில்களில் உள்ள இருக்கைகள் ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

சென்னை:

சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் ரெயில் பயணத்தின் போது சிலர் செய்யும் அநாகரீகமான செயல்கள் மற்றவர்களுக்கு ஆபத்தையும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறி உள்ளது. மேலும் புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரெயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் எதிரே உள்ள இருக்கைகளில் கால்களை வைப்பதால், அந்த இருக்கைகள் அசுத்தமாவதுடன், மற்றவர்களுக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

ரெயிலில் பயணிக்கும் ஒருவர் தனது நண்பர் மற்றும் உறவினர்களுக்காக இருக்கைகளை பிடித்து வைக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால், முதலில் வரும் மற்ற பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை.

ஒரு சில பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதில் அமராமல் ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்பதற்கு முன்பே இருக்கைகளை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் ஏறுவதும், இறங்குவோருக்கு இடையூறு செய்வதும் விபத்துகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களுக்கும் அது ஆபத்தாக முடிய சாத்தியமுள்ளது.

எனவே ரெயில்களில் உள்ள இருக்கைகள் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், காலியாக உள்ள இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ரெயில் பெட்டியின் வாசல்களில் அமர்வதும், மற்ற பயணிகள் ஏறவும், இறங்கவும், வழியை மறிப்பதும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News