மணமகனுக்கு பட்டுவேட்டி, மணமகளுக்கு பட்டுச்சேலை..! இ.பி.எஸ். வாக்குறுதி
- திமுகவின் 51 மாத ஆட்சியில் கிராமம் முதல் நகரம் வரை போதை விற்பனை நடக்கிறது.
- தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டி வருவதை தடுக்கும் தேர்தல் இது.
ராணிப்பேட்டையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ராணிப்பேட்டை நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம். அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நம் கூட்டணி வேட்பாளர் இத்தொகுதியில் வெற்றி பெறப்போகிறார் என்பதற்கு இந்தக் கூட்டமே சாட்சி.
அதிமுக ஆட்சியில்தான் நீங்கள் நீண்ட நாட்களாக வைத்த கோரிக்கையான ராணிப்பேட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவித்தோம். இது மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.
ஏனென்றால் இதற்கு 400 கோடி ரூபாய் நிதி வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கண்காணிப்பாளர் அலுவலகம் என பல துறை அலுவலகங்கள் அமைக்க வேண்டும். நீங்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தது அதிமுக அரசு.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், முதியோர் என ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனையால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். திமுகவின் 51 மாத ஆட்சியில் கிராமம் முதல் நகரம் வரை போதை விற்பனை நடக்கிறது. இதனால் குடும்பமே. நடுத்தெருவுக்கு வருகிறது.
போதை ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை எல்லாம் நடக்காத நாளே இல்லை. செய்திகளில் பார்த்தால் கொலை நடக்காத நாளே இல்லை, கொலை நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.
7 மாதத்தில் 850 கொலைகள் நடந்திருக்கிறது. கடந்த 18 நாட்களில் இந்த மாவட்டத்தில் 63 கொலைகள் நடந்திருக்கிறது. ஒரு மாநிலம் அனைத்து துறையிலும் சிறந்து விளங்க சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைக்கு பொம்மை முதல்வர் ஆள்வதால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
திமுக குடும்ப கட்சியின் ஆட்சியாக மாறிவிட்டது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026. தமிழகத்தை ஒரு குடும்பம் சுரண்டி வருவதை தடுக்கும் தேர்தல் இது, ஒரு குடும்பம் பிழைப்பதற்காக தமிழகம் இருக்கிறது..?
திமுக நாளுக்கு நாள் தேய்கிறது அதனால்தான் வீடுவீடாக கதவைத் தட்டி உறுப்பினர் சேர்க்கைக்கு கெஞ்சிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். திமுக எந்தளவுக்கு செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். மக்கள் மட்டுமின்றி கட்சியினர் செல்வாக்கையும் இழந்துவிட்டது.
இந்த 51 மாதமும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. குடும்பத்தை பற்றிதான் சிந்தித்தனர். உதயநிதிக்கு எம்.எல்.ஏ, அமைச்சர், துணை முதல்வர் கொடுத்ததுதான் சாதனை. வேறு என்ன இருக்கிறடு? அதிமுக ஆட்சி சாதனை என்றால் மாவட்டத்தை பிரித்து மக்கள் நன்மதிப்பை பெற்றோம், திமுக அப்படியா?
ஸ்டாலினும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் நடந்துசெல்கிறார்கள், அச்சமயம் உதயநிதி ஒரு படத்தில் நடத்திருந்ததைப் பற்றி பேசிக்கொண்டு செல்கிறார்கள். நாட்டு மக்கள் பற்றி பேசினால் பரவாயில்லை, மகன் படம் மூலம் வருமானம் வருகிறதா என்று கேட்கிறார். ஆக மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை, மகனைப் பற்றிதான் சிந்திக்கிறார். ஓட்டுக்களை வாங்கும்வரை கவர்ச்சியாகப் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்துவிடுவார்கள்.
திமுக 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். கொஞ்ச நஞ்ச பொய் இல்லை, மூட்டை மூட்டையாக பொய் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிலவற்றைச் சொல்கிறேன்.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. இப்போது 100 நாள் வேலைத்திட்டம் 50 நாளாக சுருங்கிவிட்டது.
தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக 2999 கோடி ரூபாய் பெற்றுக்கொடுத்தோம். ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான்.
கேஸ் சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள், கொடுக்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் ரத்துசெய்யப்படும் என்றனர், ரத்து செய்யவில்லை. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்றனர், பெட்ரோல் விலையை மட்டும் பெயரளவுக்குக் குறைத்தனர். ஆனால், விவசாயிகள், மீனவர்கள் பெருமளவு பயன்படுத்துவது டீசல்தான். அதற்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி. அதனை ராணிப்பேட்டையில் வந்து சொல்லுங்கள், எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். அவர்களின் கொஞ்சநேரம் பேச்சைக்கேட்டால் உண்மை என்று நம்பிவிடுவீர்கள் அதனையும் பொய். திமுகவுக்கு முதலீடே பொய்தான்.
இதே அதிமுக அறிவித்த அறிவிப்பை நிறைவேற்றிய கட்சி. அம்மா மிக்ஸி, ஃபேன் கொடுத்தோம். சீருடை, புத்தகம், லேப்டாப் எல்லாம் கொடுத்தோம். திறமையான மாணவர்களை உருவாக்கிக் கொடுத்தோம், அதைப் பொறுக்க முடியாமல் லேப்டாப் நிறுத்திவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சிஅமைந்ததும் இத்திட்டம் தொடரும்.
உரிமைத் தொகை கொடுத்தோம் என்று ஸ்டாலின் சொல்கிறார். அவர் தானாகக் கொடுக்கவில்லை, தாய்மார்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை. அதிமுகதான் தொடர்ந்து அதுக்குப் போராடியது. அதன்பிறகுதான் 28 மாதங்கள் கழித்து உரிமைத் தொகை கொடுத்தனர்.
இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுப்பதாகச் சொல்கிறார். தேர்தலுக்கு 8 மாதம் உள்ளது. அதுவும் பெண்கள் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை, தேர்தலுக்கு பெண்கள் வாக்கு தேவை அதுக்காகவே கொடுக்கிறார்கள். இவர்களுக்கு வெறும் 8 மாதம் தான் கிடைக்கும், 52 மாதம் பணம் கிடைக்கவில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி திமுக.
எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு அடிமையாகிவிட்டார் என்கிறார் ஸ்டாலின். நீங்க சிந்தித்துப் பாருங்கள், 1998 அதிமுக, பாஜக கூட்டணி திருச்செங்கோட்டில் வென்று நான் எம்பியானேன், அதன்பிறகு அம்மா விலகிய பின்னர் திமுக பாஜகவோடு 1999 மற்றும் 2001 ஆகிய தேர்தல்களில் கூட்டணி வைத்தது.
மத்தியிலும் திமுக அங்கம் வகித்தது. அப்போதெல்லாம் பாஜக மோசமான கட்சியல்ல, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி. திமுகவுக்கு ஆட்சி அதிகாரம் தேவை என்றால் யார் காலையும் பிடிப்பார்கள். அந்தக் கூட்டணியிலாவது விசுவாசமாக இருந்தார்களா என்றால் இல்லை, 5 ஆண்டு பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு உடனே காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டது. அவர்களுக்கு கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது, அதிகாரம் தான் முக்கியம்.
எங்களை பொறுத்தவரை கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலுக்கு அமைக்கப்படுவது, கொள்கை என்பது நிலையானது மாறாது. அந்த அடிப்படையில் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது அதிமுக நிலைப்பாடு, ஊழல் நிறைந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு, இரண்டு பேருக்கும் ஒத்த கருத்து திமுகவை அகற்றுவது அதனால்தான் கூட்டணி சேர்ந்திருக்கிறோம். ஸ்டாலின் இதை அப்படியே மாற்றி இபிஎஸ் மதவாதக் கட்சிக்கு அடிமையாகிவிட்டார் என்கிறார்.
நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி வைக்கவில்லை, இப்ப திமுகவை அகற்ற கூட்டணி அமைத்திருக்கிறோம். சிறுபான்மை மக்களிடம் வெறுப்பபை உண்டாக்கும் வகையில் பேசுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும், அதிமுக மீது பழி சுமத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நாடகம்.
சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசு அதிமுக தான். எம்ஜிஆர், அம்மா, அவருக்குப் பிறகும் என 31 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த கட்சி அதிமுக. இந்தக் காலகட்டத்த்தில் மத, ஜாதி சண்டை கிடையாது, அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்ந்தது.
அம்மா முதல்வராக இருந்தபோது ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி வழங்கப்பட்டது. நாகூர் தர்கா சந்தனம் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் மானியம் 12 கோடி ரூபாய் வழங்கினோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் கொடுத்தோம், சென்னை ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி நிதியளித்தோம், ஹாஜிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கினோம், உலமாக்களுக்கு மோதினார்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தினோம், உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ.25 ஆயிரம் கொடுத்தோம், வக்ப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், தர்கா பள்ளிவாசல் கட்டிட நிதி வழங்கினோம்.
இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிட்டோம். கஜா புயலால் நாகூர் தர்கா குலக்கரை சேதமடைந்தது, நானே பார்வையிட்டு சரிசெய்ய ரூ.4 கோடியே 25 லட்ச ரூபாய் கொடுத்தோம்.
சிறுபான்மை மேம்பாட்டுக் கழகம் அமைத்தோம். 2017ல் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு குறித்த மணிமண்டபம் திறக்கப்பட்டது, கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைத்தோம், ராமேஸ்வரத்தில் மறைந்த அப்துல் கலாம் பெயரில் அரசு கலை அறிவியல் கல்லூரி கொடுத்தோம். இஸ்லாமியர்களின் பெரும்பான்மை கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுத்தோம்.
இந்தப் பகுதியில் மரியாதைக்குரிய முகமது ஜான் அவர்களை எம்.பி.யாக்கினோம். சிறுபான்மை மக்கள் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க எம்பி பதவி கொடுத்தோம். எங்களுக்கு ஜாதி,மதம் கிடையாது, ஆண் ஜாதி ,பெண் ஜாதி இரண்டுமட்டுமே. நாங்கள் வாக்குக்காக சொல்லவில்லை, என்ன செய்தோம் என்பதைச் சொல்கிறோம்.
சிறுபான்மை மக்கள் உணரவேண்டும் என்பதற்காக சொல்கிறோம். திமுக சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்கள், கொள்கையுடன் நடப்பது அதிமுக. அவரவர் மதம் அவரவருக்கு புனிதமானது அதில் ஒருபோதும் அதிமுக தலையிடாது. எந்த மத்ததை சார்ந்தவரும் எவருக்கும் அடிமையில்லை.
கிறிஸ்தவ பெருமக்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள், தேவாலய புனரமைப்பு நிதி, ஜெருசலேம் புனித பயணம் நிதியுதவி ரூ.38 ஆயிரமாக உயர்த்தி வழங்கினோம், சிறுபான்மை கல்வி உதவித்தொகை, அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில் 37 லடத்து 16 ஆயிரம் மாணவர்களுக்கு 884 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. சிறுபான்மை கல்வி அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட உதவினோம்.
2026 தேர்தல் ஊழல் நிறைந்த மக்கள் விரோத திமுகவை வீழ்த்துவதாக இருக்க வேண்டும். மேல்விஷாரம் பகுதியில் 557 இஸ்லாமியர்கள் நீண்டநாள் குடியிருந்தனர், மாற்று இடம் கொடுத்து வீடுகளை அப்புறப்படுத்தினால் சரியாக இருந்திருக்கும், ஆனால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் வகையில் வீடு ஒதுக்காமல் அவர்களின் வீடுகளை இடித்துள்ளனர். அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் மேல்விஷாரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
அதேபோல், இந்த மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலத்துக்கு கனிமவளம், மணல் கடத்துறாங்க, அது யாரென்பது உங்களுக்கு தெரியும். இனி காவல்துறையும், வருவாய்த்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், அப்படி தடுக்காவிட்டால், எல்லா லாரிகளும் டோல்கேட் வழியாகத்தான் போகுது, அதையெல்லாம் தோண்டி எடுத்து யாரெல்லாம் இந்தக் காலகட்டத்தில் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்தார்களோ அவர்கள் மீது அதிமுக ஆட்சியில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டாலின் அவரையே சூப்பர் முதல்வர் என்று சொல்லிக்கொள்கிறார்.
எதில் என்றால் கடன் வாங்குவதில்தான்..? இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமை ஸ்டாலினை சேரும். 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன். நாம் தான் கட்டியாக வேண்டும். மக்கள் மீது கடனை சுமத்திய அரசு தொடர வேண்டுமா? ஏற்கனவே வரிகளையெல்லாம் உயர்த்திட்டாங்க, மின்கட்டணத்தையும் உயர்த்திட்டாங்க.
தமிழகத்தில் நிர்வாக்க கோளாறு. இப்போது இருக்குற டிஜிபி ஓய்வு பெற இருக்கிறார். வருகிற 31ம் தேதியோடு ஓய்வு. 3 மாதத்துக்கு முன்பாகவே மத்திய அரசுக்கு தகுதியான பட்டியல் அனுப்ப வேண்டும். மத்திய அரசு மூவரைத் தேர்வுசெய்து மாநில அரசுக்கு அனுப்புவார்கள்.
அதில் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். ஆனால் இன்னும் 10 நாள்தான் இருக்கிறது. இன்னும் இந்த அரசு பட்டியலை அனுப்பாமல் தடுமாறிக்கொண்டு இருக்குது, அவர்களுக்கு சாதகமானவரை நியமிக்க முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது.
டிஜிபி முக்கியமான பொறுப்பு. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதுக்கு தலைமை இல்லாவிட்டால் யார் கவனிப்பது…? உடனே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் வீடு வீடாக வந்தார்களா? நான்கு வருடங்கள் மக்களை பற்றி கலவைப்படலை, மனுவை வாங்கி தீர்வு காண்பாராம் நடக்குமா? 46 பிரச்னை இருப்பதாக முதல்வரே ஒப்புக்கொண்டார். இத்தனை பிரச்னை இருந்தும், அவற்றை தெரியாமல் இருக்கும் முதல்வர் ஆளவேண்டுமா?
அதிமுக அரசு அமைந்தவுடன் ஏழை ,தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் மந்திரி இருக்கிறார், அவர்தான் வேட்டி சேலை கொடுக்கவேண்டும். அவர் முறையாக கொடுக்கவில்லை. நான் சட்டமன்றத்தில் பேசியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இது பற்றி விசாரிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களுக்கு கொடுப்பதில் ஊழல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக ஆட்சி அமைந்ததும், தீபாவளிதோறும் சேலை வழங்கப்படும். தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் தொடரும், மணமகனுக்கு பட்டுவேட்டி, மணமகளுக்கு பட்டுச்சேலை கொடுக்கப்படும்.
ராணிப்பேட்டைக்கு காவிரி கூட்டுக்குடிநீர், மேல்விஷாரத்தில் குடிநீர் தேவை பூர்த்தி செய்தோம், நீர்த்தேக்க தொட்டி, மருத்துவமனை தரம் உயர்த்தல், மாவட்ட எஸ்பி அலுவலகம், சிப்காட் பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டு அதில் ஃபேஸ் 3, 599 ஏக்கர் நிலத்தில், 53 தொழிற்சாலைகள் அறிவிக்கப்பட்டு, இப்போது 35 தொழிற்சாலைகள் தான் இயங்குகிறது.
அதிமுக ஆட்சி அமைந்ததும் மீதமுள்ள நிலத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுப்போம். இன்னும் நிறைய திட்டங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.
அடுத்தாண்டு தேர்தல் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி வேட்பாளருக்கு அவர்கள் சின்னத்துக்கும் ஓட்டளித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.