த.வெ.க.வில் இணைகிறீர்களா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத செங்கோட்டையன்!
- அதிமுகவிலிருந்து நீக்கபட்டது மனவேதனையை தருகிறது.
- அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதிப்பதாக கூறி செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனிடையே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடி.வி. தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது குறித்து செங்கோட்டையன் தெரிவிக்கையில், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையன் கோர்ட்டில் வழக்கு தொடருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று தகவல் பரவியது. அதாவது வருகிற 27-ந்தேதி நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், "50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து, இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பரிசு அதிமுகவிலிருந்து நீக்கம்; இந்த மனவேதனை உங்களை போன்றோருக்கு நன்றாகத் தெரியும்" என்று தெரிவித்தார்.
அப்போது தவெகவில் இணைகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பினார்.