நயினார் நாகேந்திரன் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்.. உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்
- பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் அமளியில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைதுக்கு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என கங்கணம் கட்டிக்கொண்டு, சட்ட நிர்ணயங்களுக்கு முற்றிலும் விரோதமான அரசாக தன்னை நிரூபித்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்துறை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் அனைவரையும் அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறதா இந்த பொம்மை முதல்வரின் அரசு?
மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் இரு அமர்வுகள் அளித்த உத்தரவுக்குப் பிறகும், திமுக ,அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இப்படி அடாவடித்தனத்தை கையாள்வதன் மூலம், இதை வேண்டுமென்றே பெரிய பிரச்சனையாக்கி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கில், தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக குளிர்காயத் துடிப்பது தெள்ளத்தெளிவாகிறது.
உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவுக்குப் பிறகும், ஆட்சியில் இருக்கும் விடியா திமுக-வை மகிழ்விக்கவோ என்னவோ, சில அதிகாரிகளும் இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு செயல்களுக்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இத்தகைய செயல்கள், கடும் கண்டணத்திற்குரியது,
மக்களாட்சி விழுமியங்களை நசுக்கும் அராஜகப் போக்கை உடனடியாக கைவிட்டு, கைது செய்யப்பட்டுள்ள திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுவித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.