பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக பேசும் சீமான்- திருமாவளவன்
- தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார்.
- மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புகிறேன்.
விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் மாணவர் முற்போக்கு அமைப்பாளர், பழங்குடி செயல்பாட்டாளர் வக்கீல் அகத்தியன் இல்ல காதணி விழா மற்றும் வி.சி.க. பிரமுகர்களின் நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய அவர் கூறியதாவது:-
மதச்சார்பின்மைக்கு எதிராக வி.சி.க. சார்பில் நடைபெறும் பேரணி அவசியமாகிறது. இந்த பேரணியில் மதச்சார்பின்மையை சார்ந்தவர்கள் பங்கேற்க வேண்டும். நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. முதலமைச்சரும் நிதி தரவேண்டுமென வலியுறுத்திருக்கிறார். இனிமேல் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை வழங்கும் என்று நம்புகிறேன்.
பெரியார் பற்றி தொடர்ந்து குதர்க்கமாக சீமான் பேசி வருகிறார். இது தேவையற்ற சர்ச்சை. தமிழக அரசியலை வேறொரு திசையை நோக்கி மடைமாற்றம் செய்ய அவர் விரும்புகிறார். அது தமிழகத்திற்கு நல்லது இல்லை.
நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வரையறைகள் வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ரிசர்வ் வங்கி அதனை திரும்ப பெற வேண்டும். நகை கடன் வழங்குவதில் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி இன்னும் உறுதிபடுத்தாமல் உள்ளது என்று தான் கூற காரணம் உடைய வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்கள் ஒட்டாமல் உள்ளார்கள் என்பதற்காக தான்.
இவ்வாறு அவர் கூறினார்.