தமிழ்நாடு செய்திகள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம்- சீமான்

Published On 2025-12-08 11:14 IST   |   Update On 2025-12-08 11:14:00 IST
  • ஒரு ரூபாய் காசு கொடுக்காமல், குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவ கூட்டம் நாம் தமிழர் கூட்டம்.
  • தேவேந்திர குல வேளாளர் மக்கள் நீண்ட காலமாக தங்களை பட்டியல் இனத்திலிருந்து விடுவியுங்கள் என போராடுகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் சமூக நீதியும் பஞ்சமர் நில மீட்பும் மற்றும் தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்றமும் என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றுவோம். குடும்ப ஆட்சியை அகற்றுவோம். மிகப்பெரிய இரு பதவிகளை குடும்பமே வகித்து வருகிறது. பெரும்பான்மையான சமூகத்தினர் குறைவான அமைச்சர் பதவி வகித்து வருகிறார்கள். 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மட்டும் இருந்தால் தாழ்த்தப்பட்டவர்களாக பட்டியலின மக்கள் இருந்திருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் 10 லட்சம் ஏக்கர் நிலமாவது மீட்போம்.

எதிர்த்து கேள்வி கேட்க வேண்டியவர்கள் திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்ததால்தான் பஞ்சமி நிலங்களை மீட்க முடியவில்லை. தேவேந்திர குல வேளாளர் மக்கள் நீண்ட காலமாக தங்களை பட்டியல் இனத்திலிருந்து விடுவியுங்கள் என போராடுகிறார்கள். ஒரு ரூபாய் காசு கொடுக்காமல், குவாட்டர் கொடுக்காமல் கூடிய தத்துவ கூட்டம் நாம் தமிழர் கூட்டம். இது தற்குறி கூட்டம் அல்ல. எங்களுக்கு வேண்டியது சலுகைகள் அல்ல. எங்களது உரிமை.

நீண்ட காலமாக சாதி வாரி கணக்கு எடுப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தவர் டாக்டர் ராமதாஸ். ஆணை முத்து இல்லை என்றால் இந்த உரிமை கிடைத்திருக்காது..சாதிவாரி கணக்கெடுப்பு தான் சரியான சமூக நீதி .10.5 சதவீத இட ஒதுக்கீடு வேண்டாம். அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந்து கொடுப்பது தான் உண்மையாக சமூகநீதி.

10 நாட்களில் எஸ்.ஐ.ஆர். கொண்டு வரும் போது 10 மாதங்களில் சாதிவாரி கணக்கு எடுப்பை நடத்த முடியாதா? இந்திய துணை கண்டத்தில் சமூக நீதி என்ற வார்த்தையை அதிகம் உச்சரிப்பது திராவிட ஆட்சி தான். இவர்கள் கூட்டனி வைத்துள்ள கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிம் மட்டு மல்ல பிற மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த நாட்டின் முதல் குடிமகள் திரவுபதி முர்முவால் கூட கோவிலுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள் என்றால் சாதி, மத வேறுபாடுகள்தான்.

சமச்சீர் பாடதிட்டம் இருக்கிறது. ஆனால் சமச்சீரான கல்வி மிகவும்பின் தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு கிடைக்க வில்லை. திருப்பரங்குன்றத்தில் உள்ளது முருகன் கோவில்.இங்கு ராமராஜ்யம் அமைக்க முயற்சி நடைபெறுகிறது .

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி உளுந்தூர்பேட்டைக்கு லோகேஸ்வரி, கள்ளக்குறிச்சிக்கு நாகம்மாள், சங்கராபுரத்துக்கு ரமேஷ், விழுப்புரத்துக்கு அபிநயா பொன்னிவளவன், திண்டி வனத்துக்கு பேச்சுமுத்து, மயிலத்திற்கு விஜய்விக் ரமன், செஞ்சிக்கு கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News