பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் - சீமான்
- தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது.
திருச்சி:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தொடுவதாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு கோடி மகளிர்க்கு உரிமை தொகை வழங்கி வந்ததாகவும், தற்போது 36 லட்சம் பேரை கூடுதலாக இணைத்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
60 வருடங்களாக இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தினமும் ரூ.30 சம்பாதிக்க முடியாத ஒரு நிலையைத் தான் இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. ஆகவே தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் விளம்பர அரசியலைத் தாண்டி இவர்கள், சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை, வரமாட்டார்கள். மக்கள் அரசியல் வந்தால் இந்த மக்கள் உழைத்து சம்பாதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்தக் கூடுதல் பேருக்கு மகளிர் உரிமை தொகையை ஏன் கடந்த ஆண்டு கொடுக்கவில்லை?
அதேபோன்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியையும் பிப்ரவரி மாதத்தில் கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த மக்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என தெரியவில்லை. பத்து லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசாங்கம், ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறது என சொல்லுங்கள்.
பஸ்சில் மகளிருக்கு இலவச கட்டணம், அந்த பணத்தை அவரது தந்தை, சகோதரனிடம் வாங்கிக் கொள்கிறார்கள். தன்மானம் மிக்க தமிழன் தனது தாய் ரூ.ஆயிரத்துக்கு கையேந்தி நிற்பதை ஏற்கமாட்டான்.
இவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஏன் அக்கறை வரமாட்டேன் என்கிறது. தமிழகத்தில் எந்த அமைச்சர் துறையில் ஊழல் நடக்கவில்லை? இடி வந்தால் டாடி, மோடியை பார்க்க ஓடுகிறார். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத முதல்வர் ஏன் ஓடிச் சென்றார்.
நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இதுவரை முருகன் மீது வராத பாசம் ஏன் இப்போது அவர்களுக்கு வருகிறது. காவிரி நீர் பிரச்சனைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா?
அயோத்தி பிரச்சனையை வைத்து அரசியல் செய்தார்கள். இப்போது அங்கு ராமர் கோவில் கட்டி விட்டதால் சர்ச்சை நீங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் முருகனை கையில் எடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சி நடக்கிறது.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது பா.ஜ.க. என கருணாநிதி பாராட்டி பேசி உள்ளார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம்.
பா.ஜ.க.வுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பது தி.மு.க. தான். அவர்கள் வந்து விடுவார்கள் வந்து விடுவார்கள் என பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளை தக்க வைக்க தி.மு.க. அரசியல் செய்கிறது.
இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்வில் பாரதி குறித்து நான் பேசினேன். தி.மு.க. மேடையிலும் பாரதி குறித்து பேச சொன்னால் பேசுவேன்.
தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசியது அப்போது இனித்ததா?
இவ்வாறு அவர் கூறினார்.