தமிழ்நாடு செய்திகள்

விரைவில் மீண்டும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் தெய்வானை யானை

Published On 2024-11-29 12:41 IST   |   Update On 2024-11-29 12:41:00 IST
  • யானை கட்டப்பட்டிருந்த அறைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
  • யானை சகஜ நிலையில் இருப்பதாகவும் விரைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்க வரும் என கூறப்படுகிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 18-ந் தேதி கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த 10 நாட்களாக அறையில் யானையை கட்டி வைத்து மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று 11-வது நாள் யானையை அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதற்காக யானையை அதிகாலையிலே குளிப்பாட்டி நவதானிய உணவுகள் வழங்கப்பட்டது.


யானை விரும்பி சாப்பிடும் பச்சை நாற்று வகை புல் உணவாக கொடுக்கப்பட்டது. அதை தெய்வானை யானை ருசித்து சாப்பிட்டது.

முன்னதாக யானைக்காக கோவில் ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாகசலை பூஜைகள் நடந்தது. யாக பூஜையில் வைக்கப்பட்ட கலத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை தெய்வானை மீது தெளிக்கப்பட்டது. மேலும் யானை கட்டப்பட்டிருந்த அறைக்கும், சம்பவம் நடந்த இடத்திற்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

தற்போது யானை சகஜ நிலையில் இருப்பதாகவும் விரைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்க வரும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News