தமிழ்நாடு செய்திகள்

குடியரசு தினவிழா நாளை கொண்டாட்டம்: மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றுகிறார்

Published On 2026-01-25 07:54 IST   |   Update On 2026-01-25 07:54:00 IST
  • சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
  • விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் நாளை குடியரசு தின விழா நடைபெற உள்ளது.

காலை 7.52 மணிக்கு விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வரவேற்பார்.

காலை 7.54 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருவார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்பார்.

பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைப்பார்.

அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைப்பார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவும். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும்.

பின்னர் ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்துவார்கள். அதை அவர் ஏற்றுக்கொள்வார்.

அதன்பின்னர் அணி வகுப்பு மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்குவார். அதைத்தொடர்ந்து விழா மேடையில் ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்திருக்க, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tags:    

Similar News