தமிழ்நாடு செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு

Published On 2024-11-30 21:17 IST   |   Update On 2024-11-30 21:33:00 IST
  • அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
  • ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்னும் 3 அல்லது 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு பெய்த கனமழையால் ஆங்காங்கே சாலையில் மழை நீர் தேங்கி நின்றது.

இதில், மின்சாரம் தாக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழிந்துள்ளனர்.

இந்நிலையில், வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சக்திவேல் என்பவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாவட்டம், வேளச்சேரி விஜயநகர் முதல் பிரதான சாலை, இரண்டாவது குறுக்குத் தெருவில் சக்திவேல், த.பெ.விநாயகம், வயது 47 என்பவர் இன்று (30.11.2024) மாலை சுமார் 05.30 மணியளவில் பெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழையால் எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

சக்திவேலின் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மின்சார வாரியம் சார்பாக ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News