தொண்டர்களின் எண்ணத்தை விஜய் சிதைக்க வேண்டாம்- ஆர்.பி.உதயகுமார்
- அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் உள்ளது.
- தி.மு.க. ஆட்சி வரக்கூடாது, இதுதான் மக்கள் எண்ணமாகும்.
மதுரை:
ஆவணி அமாவாசை முன்னிட்டு மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திற்கு எழுச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கட்சி தொடங்கியவர்கள் மாநாடு நடத்தலாம், ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அ.தி.மு.க. மக்களுக்காக சேவை செய்யும் இயக்கமாகும்.
மாநாட்டில் விஜய், தி.மு.க.வை பாய்சன் என்று கூறுகிறார், போன மாநாட்டில் பாயசம் என்று கூறினார், அடுத்த மாநாட்டில் அமுது என்று கூட பேசுவார். தி.மு.க. தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார்.
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் உள்ளது. இதில் விஜய்க்கு சந்தேகம் வேண்டாம். கடந்த சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை வைத்து தான் தேர்தலை சந்தித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். இன்றைக்கு தேசியக் கட்சியில் உள்ள அமித்ஷாவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார். இதுதான் கள நிலவரம், இதில் விஜய்க்கு எந்த சந்தேகம் வேண்டாம்.
விஜய் வாய்க்கு வந்ததை வந்ததை பேசி வருகிறார். இதனால் அவருக்கு தான் பின்னடைவே தவிர எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. இன்றைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வேதனையாக உள்ளார்கள் என்று கூறுகிறார். விஜய்க்கு எப்படி தெரியும், உங்களிடத்தில் எந்த தொண்டர்களாவது கூறினார்களா? அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை யாரும் சிதைக்க முடியாது, ராணுவ கட்டுப்பாட்டுடன் உள்ளது. அ.தி.மு.க. பற்றி விஜய் கவலைப்பட வேண்டாம், தனது தொண்டர்கள் பற்றி கவலைப்பட வேண்டும்.
அ.தி.மு.க., பா.ஜ.க. பொருந்தாத கூட்டணி என்று கூறுகிறார். மக்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணியாக அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி உள்ளது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
பா.ஜ.க., சீமான், விஜய், பா.ம.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க.வை எதிர்த்து வருகிறது. இன்றைக்கு தி.மு.க.விற்கு 65 சதவீதம் எதிர்ப்பு உள்ளது, ஆதரவு 35 சதவீதம் தான் உள்ளது. தி.மு.க. ஆட்சி வரக்கூடாது, இதுதான் மக்கள் எண்ணமாகும்
தொண்டர்கள் பேச்சைக் கேட்டால் தான் தலைவராக நிலைத்து நிற்க முடியும், அப்போது தான் தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்கள். விஜய் தொண்டர்களின் உழைப்பை சிதைக்க வேண்டாம். தமிழகத்தில் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் தான் போட்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.