சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு...
- கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல் லேசான மழையும், மேகமூட்டத்துடனும் காணப்படுகிறது. மேலும் கனமழை பெய்து வருவதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.