தமிழ்நாடு செய்திகள்

போதை பொருள் வழக்கில் தயாரிப்பாளர் கைது: சிக்கும் சினிமா துணை நடிகைகள்

Published On 2025-12-08 12:48 IST   |   Update On 2025-12-08 12:48:00 IST
  • துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர்.

சர்புதீனின் காரில் இருந்து 27.91 லட்சம் ரூபாயும், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சர்புதீன், தொழில்அதிபர் சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு மேலாளராக பணியாற்றி உள்ளார். பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கமுடையர். இதனால் அதில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார்? என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாகவும் சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்தனர்.

இந்த நிலையில் சர்புதீன் கொடுத்த தகவலின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் பிரபல நடிகைகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News