கோவை சோமனூரில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
- கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலாம்பூர்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் உள்ளன.
இந்த தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாவும் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டும், சட்டப்பூ ர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது. இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி இன்று முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
கோவை சோமனூரில் உள்ள யூனியன் வங்கி முன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போராட்டத்தில், 2022-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கூலியில் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு புதிய கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலி உயர்வை குறைத்து வழங்காத வகையில் சட்ட ரீதியான பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில, மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து விசைத்தறியாளர் பூபதி கூறும்போது, அனைத்து ஜவுளி உற்பத்தியாளர்களும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்று கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 22 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக ரூ.600 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன என்றார்.
இன்று தொடங்கிய போராட்டமானது வருகிற 15-ந் தேதி வரை நடக்க உள்ளது.