முதலமைச்சருக்கு பழிவாங்கும் அரசியல் தெரியாது: விஜய் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில்
- மக்கள் ஆசியோடு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.
- எனவே பழிவாங்கும் அரசியல் அவருக்கு தெரியாது, வராது.
கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் 5 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய விஜய், "எங்களுக்கு தரப்பட்ட இடத்துல நாங்க பேசிட்டு இருந்தோம். அதை தவிர நாங்க எந்த தவறும் செய்யல. எங்க கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மேல FIR... அது மட்டுமில்ல சமூக வலைத்தளங்களை சேர்ந்த நண்பர்கள் மேல FIR போட்டு புடிச்சிட்டு இருக்காங்க.
CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள். அவங்க மேல கை வைக்காதீங்க. நா வீட்டுல இருப்பேன் இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணா பண்ணுங்க" எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் ரகுதியிடம் கேள்வி எழுப்பியதற்கு "முதலமைச்சருக்கு யாரையும் பழி வாங்கும் எண்ணம் கிடையாது. பழிவாங்கும் அரசியல் அவருக்கு தெரியாது. அது அவருக்கு வேண்டியதும் இல்லை. தேவையும் இல்லை.
பழிவாங்கும் அரசியல் செய்து, ஆட்சிக்கு வர வேண்டும் என நினைத்திருந்தால், ஜெயலலிதா இல்லாத 2016-17 காலத்திலேயே ஆட்சிக்கு வந்திருக்க முடியும். அப்படி ஆட்சிக்கு வரும் கெட்ட எண்ணம் முதலமைச்சருக்கு கிடையாது. மக்கள் ஆசியோடு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம். எனவே பழிவாங்கும் அரசியல் அவருக்கு தெரியாது, வராது" எனப் பதில் அளித்தார்.