ஸ்ரீவைகுண்டம் அருகே பிளஸ்-1 மாணவனை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு கைது
- மோட்டார் சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறாய் எனக் கேட்டதால் தகராறு.
- உறவினருக்கு ஆதரவாக மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கத்திக்குத்து.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேச செல்வன் (வயது 41). ஏரல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.
அவரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று சிவனேச செல்வன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செந்தில் ஆறுமுகத்தின் சித்தி மகனான பிளஸ்-1 படிக்கும் அர்ஜூன் (16) என்பவர் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்ததும் அர்ஜூன் போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவனேச செல்வன் தனது மோட்டார் சைக்கிளின் சாவியில் இருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ஜூனை குத்தியுள்ளார். இதில் அர்ஜூன் படுகாயம் அடைந்தார்.
அர்ஜூனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவனேச செல்வன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிவனேச செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.