தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்கும் பா.ம.க. நிர்வாகிகள் - ராமதாசுடன் இன்றும் ஆலோசனை
- பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
- டாக்டர் ராமதாஸ் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக பா.ம.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.அன்புமணி ராமதாஸ் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதனை தொடர்ந்து பா.ம.க. மாநில பொருளாளர், பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் போன்ற பல்வேறு நிர்வாகிகளை தொடர்ந்து மாற்றி வருகிறார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாசை நேற்று அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 45 நிமிடம் சந்தித்து விட்டு அங்கிருந்து சென்றார். மேலும் ராமதாசை சமாதானம் செய்வதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவு பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி டாக்டர் ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் சிலரை டாக்டர்.ராமதாஸ் நியமனம் செய்ய உள்ளார். இதனால் தைலாபுரம் தோட்டத்திற்கு பா.ம.க.வினர் வருகை தந்துள்ளனர்.
மேலும் ரெயில்வே துறை முன்னாள் மத்திய இணை மந்திரி அரங்கவேலு, பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் ஆகியோர் டாக்டர்.ராமதாசுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
டாக்டர் ராமதாஸ் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக பா.ம.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இன்றும் பா.ம.க. நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.